திங்கள், 28 அக்டோபர், 2013

சூழ்நிலை


வாடகை வீட்டில்
உரிமையாளருக்கு பயந்திருந்தபோது
சுவர் அசிங்கப்படுத்தப்பட்டு விட்டதாய்
தோன்றியதெல்லாம்...

இப்போது
சித்தன்ன வாசல் ஓவியங்களைவிடவும்
சிறந்ததென தோன்றுகின்றன...

சொந்த வீட்டுச் சுவரில்
செல்ல மகனின் கிறுக்கல்கள்...

அறிவிப்பு


கிறுக்காத சுவர்கள்
கிழியாத வார இதழ்கள்
கலையாத பாத்திரங்கள்
கழற்றப்படாத பேனா மூடிகள்
ஒழுங்கான தோரணையில்-
அருங்காட்சியகம் போல
அடுக்கியது கலையாத வீடுகள்...
ஆணித்தரமாய் அறிவிக்கின்றன...
அந்த வீட்டில்-
சிறு பிள்ளைகள்
இல்லையென...

கவிதை


துன்பம் நேர்கையில்
எனக்கு பதிலாய்
எழுதுகோல் சிந்தும்
கண்ணீர்!

இயல்பு

நிலம் நோக்கி
திருப்பிய தீப்பந்தத்தில்
வான் நோக்கி 
எழுந்தன ஜ்வாலைகள்..

நிலை மாறினால்
இயல்பு மாறுமா?!

நகைப்பு

 

நிழலின் அருமை வெயிலில்
நிஜம்தான்!
  
அளவற்ற ஆசைகளினால் 
அத்தனை பருவத்தையும் 
அலுப்புடனே கழித்துவிட்டு 
இப்போது
எண்ணிப் பார்க்கிறது 
மூப்பு ...
"வாழ்வில் எப்பருவம்தான் 
இனிமையானது?"

இதோ கிடைக்கிறது பதில்...
"இளமை" என்று!

ஆம்-
 'வாலிபத்தின் சோலையில் 
துள்ளித்திரிந்த அந்த நாட்கள்தான்
எவ்வளவு அற்புதமானவை...?'

"வாழும் நாளில் உணராத 
அந்த நாட்களின் அருமையை 
வயோதிகத்தில் உணர்ந்து 
என்ன பயன்?" 
எனக் கேட்டு நகைக்கிறது 
காலச்சக்கரம்!